போராட்டத்தை பற்றி கேட்டபோது, போராட்டக்களத்தில் ஒலிக்கும் கோஷங்களை பற்றி கூறிய சிறுவன், ''குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்தால்தான் அம்மா வீட்டுக்கு வருவார். அன்றுதான் போராட்டம் முடியும்,'' என்றான்.
ஷெனாஸ், அமீர் தம்பதி முழுநேரமாக இருவருமே போராட்டத்தில் இருக்கிறார்கள். மூன்று குழந்தைகளும் போராட்டம் நடைபெறும் இடத்தில்தான் பெற்றோரை சந்திக்கிறார்கள். ''காலை பள்ளிக்கு போகும் முன்பாகவும், இரவில் தூங்குவதற்கு முன்பாகவும் சிறிது நேரம் பாடங்களை சொல்லிக்கொடுக்கிறோம். என் மகனுக்கு மூன்று பரீட்சைகள் உள்ளன. வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் நாங்கள் இருவருமே தன்னார்வலர்களாக இருப்பதால், குழந்தைகளுக்கான நேரத்தை முழுமையாக ஒதுக்கமுடியவில்லை. ஆனால் இந்த போராட்டம் சமூகத்திற்கான போராட்டம் என்பதால், நாங்கள் எங்கள் வசதிக்காக பின்வாங்கவிரும்பவில்லை,''என்கிறார் அமீர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், தங்களது குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இருப்பதால், குழந்தைகளை மட்டும் வீட்டில் தங்கவைப்பதை விரும்பவில்லை என்பதால் தங்களுடன் தங்கவைப்பதாக தெரிவித்தார் அமீர்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் வந்து போராட்டக்கார்களிடம் பேசுகிறார்கள்.
இருப்பினும், கடந்த பிப்ரவரி 14 அன்று தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை அரசு கொண்டுவரவேண்டும் என திமுக கோரியபோது, அந்த கோரிக்கையை அவைத்தலைவர் தனபால் நிராகரித்துவிட்டார். அடுத்த சட்டமன்ற கூட்டம் எப்போது நடைபெறும் என தேதி அறிவிக்கப்படாமல் பிப்ரவரி 20ம் தேதி அன்று சட்டமன்ற கூட்டம் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.